ஒத்துழைப்பு நல்குக

கொடுங்கோலன் பெருங்காலன்
நெடுநாள்அவா, குறிக்கோள் ஈடேற
பீடுநடை வெறிகொண்ட வேகம்

நீண்ட நெடிய பட்டியல் இல்லை
இரண்டே இரண்டு இலக்கு தான்

நாட்டுமக்களை பெருநிறுவனத்திற்கும் 
நாட்டை வெளிநாட்டிற்கும் விற்றுவிட்டால்
ஜென்மசாபல்யம் அடைந்திடுவார்

ஆடுவெட்ட பொறுமைகாக்கும் சம்பிரதாய
சம்மதம்கூட சாத்தியமில்லா நிலையில்
வெட்டிவீழ்த்தப்பட்டுவிட்டது சனநாயகம்

அடிமைகளுக்கு ஓர் வேண்டுகோள்
அவர்களுக்கு ஏதுவாக தலைகொடுங்கள்
அவர்கள் வெட்டியெறிவதற்காகவே
படைக்கப்பட்டவர்கள் தாம் நாம்

கானல்நீர்

கூதிர்கால பின்பனி
இரவில் நிர்வாண
நிழல் கண்டு
புணர எத்தனிக்கும்
மன பிறழ்வே
வாழ்க்கை பயணம்

கதிரவன் ஒளிப்படர
குலையும் நிழல்கண்டு  
ஏமாற்றம் எஞ்ச
மறையும் நிழலுடன்
நிழலாகும் வாழ்வு

யோக்கிதை

தன்மீது எழும் கேள்விகளுக்கு
ஊர் அறிந்த திருடர்களை
ஒப்பிட்டு விடைதரும் பாங்கு
உணர்த்துகிறது அவர்களது
உண்மை யோக்கிதையை !

என் நிலை

உண்மையை உரக்க சொல்வேன் யான்
உலகிற்கு உறைத்திட செய்வேன் - என்
உயிரினை மயிரென மதிப்பேன் பின்
உலகினை உயிர்பித்து சாவேன் !

தகர்க்கவே பிம்பங்கள்

​பிம்பங்களை கட்டமைப்பது
நிகழ்ந்தவண்ணமே இருக்கும்
பிம்பங்களை மென்மேலும்
கட்டியமைத்து பூதாகரமாகுத்தல்
தொடர்ந்து கொண்டிருக்கும்

பிம்பத்தின் நிழலில்
இளைப்பாறுதலும்
அசட்டையாய் அமர்ந்து
சோம்பலில் சாய்ந்து
துணைகளை ஈர்த்து
ஒளிந்து கொள்தல்
தப்பித்துக் கொள்ளும்
மனோபாவமே

இறுதியில், பிம்பம்
அதனை கட்டமைத்து
காலிடியில் கிடப்பவரை,
நசித்து அழித்து-பின் 
நொருங்கியே தீரும்

இந்த காலத்தின்
கட்டாய கட்டளையை
உணர்ந்து பிம்பம்
உங்களை உடைப்பதற்குள்
அதனை உடைத்தெறிந்து
உண்மையை நோக்கி
நகர்தலே பரிணாமம் !

கய"மை"


*
அன்றாடங்காச்சியாய் காசிற்கு
அலையும் ஏழைகளையும்
கவலைகொள்ளாது இன்பமாய்
திரியும் எசமானர்களையும்
வர்க்கவேறுபாடு அறிய
வரையும் அடையாலமை

*
தன் உழைப்புக்கூலியை
தானே யாசகமாய்
ஏந்திபெற்று இதன்பின்னரும்
திருடுபட்டம் காரணம்காட்டி
அவன்கையில் மையிடுதல்
சுயமரியாதைக்கோர் முற்றுப்புள்ளி

*
ஓடுபவனை காலுடைத்து
கையிலிருப்பதை பறித்து
வரிசையில் காத்திருக்கவிட்டு
நீவீரிடும் கரும்புள்ளி
காசுள்ளவனை கப்பலேற்றி
இல்லாதவனை கழுதைமேல்
ஏற்ற வைக்கும் கரும்புள்ளி

*
நூறுகோடி மக்களின்
குறலறியா மன்னன்
தன்பிம்பம் சுயலாபம்
எனும்சிறு புத்தியில்
தீட்டும் திட்டம்மும்
ஈட்டும் சட்டமும்
அடிபணியும் மக்களும்
இது "சர்வாதிகாரம்"
என்று குத்தப்பட்ட
ஐ.எஸ்.ஒ முத்திதரை

-கையில் மை!

தொடர்"ச்சீ"

உதிரக்கண்ணீர் பெரும்
அருவியாய் கொட்டி
காலமெல்லாம் கட்டுண்ட
கரங்கள் இப்பொழுது
வெட்டுண்டு துடிப்பதை
வெறுமனே பொறுத்திருக்க

நீலிக்கண்ணீர் வேடமிட்டு
வரதொடங்கும் முன்
அறியா அடிமைகள்
வெட்டுண்டு துடிதுடிக்கும்
கரங்கள் கொண்டு
அக்கண்ணீர் துடைத்து
ஆறுதல் அடைகிறது

நாட்டுக்காகவென நம்
தியாகங்கள் தொடர 
ஓட்டுக்காக அவர்கள்
வேடங்கள் தொடர்கிறது...

வெறுமை

1...2...3...4...5...6...7...8...9...10...
.................................................
.................................................
.................................................
..................43,19,999...43,20,000
என்று 43,20,000 வரை
50,00,00,000 முறை
எண்ணவும்...

இது "வெறும்"
50,00,00,000
"வெட்டி" உயிரின்
43,20,000
"வெற்று" நொடிகள்

போலி நாடக ஆட்டத்தை
நிறுத்திவிட்டு சிந்தித்தால்
உணரக்கூடும் இந்த
நெடிய நொடிகளில்
"வெறுமையை"

புதிய இந்தியா

புதிதல்ல
ஏதும்
புதிதல்ல

மக்கள் அவதிப்படுவதும்
தியாகங்கள் செய்வதும்
காத்திக் கிடப்பதும்
காசிற்கு அலைவதும்

பொறுத்துக்கொள்வதும்
கஞ்சிகலைவதும்
கடன்படுவதும்
கண்ணீர்வடிப்பதும்

கவலைகொள்வதும்
அறியாமையிலிருப்பதும்
வாய்மூடிக்கிடப்பதும்
ஏமாற்றப்படுவதும்

எங்களுக்கு இதெல்லாம்
பழகிவிட்டது
உங்களைப்போலவே

உங்களுக்கு ஏமாற்றி
எங்களுக்கு ஏமாந்து

உங்களிடம் எங்களுக்காக
கருணை எதிர்பார்க்கவில்லை
உங்களுக்காவே கேட்டிறேன்

இப்படி ஒரே அடியாய்
எங்களை ஏமாற்றி
"கொன்றுவிட்டால்"
அடுத்து நீங்கள் ஏமாற்ற
நாங்கள் இருக்கமாட்டோம்.

அலுவல்-இடைவேளை

குழப்பமுற்ற நாட்கள்
உறக்கமற்ற இரவுகள்
தெளிவற்ற பயணங்கள்
அழுத்தமுறும் பொழுதுகள்

குளிர்மர நிழலாய்
சிறிய கவனச்சிதறல்
அவளுக்கு தேநீர்
எனக்கு அவள் !!!

மீள் துவக்கம்

உலகம் ஒலி எழுப்ப
கற்றுக்கொள்ளாத பொழுது
பிறந்தது எங்கள் மொழி

வையத்து மக்கள் எல்லாம்
கண்ணற்று கிடந்தபொழுது
கல்விக்கூடம் அமைத்தவர்கள்
எம் அருமை மக்கள்

அறிவென்ற ஒன்றை
உணராத பொழுது
ஆராய்ச்சி செய்து
ஆச்சிர்யங்கள் நிகழ்த்தினார்

உணவின்றி தவித்த பொழுது
சுவைமிக்க காப்பியம்
படைத்து இன்புற்றனர்

உலகம் கண்விழுத்துவிட்ட பின்
ஏன் கண்ணயர்ந்து போகிறீர்

சாதித்துவிட்ட களைப்பா?
இது, ஓய்வா? உறக்கமா?
அல்ல மரணமா?

இன்னும் ஒருகணம் கூட
தாமதிக்க வேண்டாம்
எழுந்து ஓட துவங்கிவிட்டோம்
புதிய பல பிரபஞ்சம் படைக்கும்
பணியை மேற்கொள்வோம்
இச்சகத்தை முத்திக்கு
அழைத்து சென்றவுடன்!

காதல்

த்தூ.. காதலே,
செத்தொழி...
கவிஞர்கள்
வேறேதும் செய்யட்டும் !!!

முறைமை

எழுதாமலே கிழிந்த காகிதம்
படிக்காமலே அரித்த ஏடு
உடுத்தாமலே நைந்த உடை
சூடாமலே வாடிய மலர்
உண்ணாமலே கெட்ட உணவு
.      .      .     .     .     .      .     .     .     .     .

என சிற்சில ஏக்கங்களில் உழலும்
மனிதன் உணரத் தவறுவது

வாழாமலே கழிந்த வாழ்வு

நட்பு

அற்ப மனித வாழ்வில்
சொற்ப கால கெடுவில்
கற்பதும் அழியும் விரைவில்
அற்புதம் ஏது உலகில்

அதிசயம் ஒன்று உண்டெனில்
அது தான் மனித உறவுகள்
அன்னையும் பிதாவும் உயிர் தந்தார்கள்
அதனால் உயிர்மீது உயரன்பு கொண்டார்கள்
கணவனும் மனைவியும் உறவு கொண்டார்கள்
கனிவுடன் நல்ல காதல் செய்தார்கள்
பிள்ளைகளும் நம் உயிரின் துளிகள்
பாசங்களால் நம்மை ஆட்டி வைத்தார்கள்
பாட்டன் பாட்டி அண்ணன் தம்பி
அத்தை மாமன் என அனைவர்க்கும்
குருதி வழியே பிரியம் பயணம்

உள்ள உறவுகளில் உள்ளம் மட்டும் உறவாக
உயர் அன்பு மட்டும் வரமாக
உயிரும் உடலும் மறந்த உறவெனில்
அது நட்பைத் தவிர வேறேதும் உண்டோ
நட்பினும் உயர்ந்தது வேறேதும் உண்டோ

கேளாமல் வருவதும் நட்புதான்
கேளாமல் தருவதும் நட்புதான்
எதிர்பாராமல் பகிர்வதும் நட்புதான்
எதிர்காலம் நிறுவதும் நட்புதான்

மகிழ்ச்சியின் முதலீடு நண்பன்
சோகத்தில் சுமைதாங்கி நண்பன்
இன்பத்தை இயற்றுபவன் நண்பன்
ஆபத்தில் ஆண்டவன் நண்பன்

நண்பர்களை பாடினால் காவியம் கனத்துப்போகும்
நண்பர்கள் நகர்ந்தாள் காதலும் தோர்த்துப்போகும்
நண்பர்கள் பேசினால் சொற்களும் தீர்ந்துபோகும்
நண்பர்கள் நீங்கினால் இயற்கையும் நீத்துப்போகும்
நண்பர்கள் இல்லாவிடில் இவ்வையமே மரித்துப்போகும்

வாழ்வு தருவது யாராயினும்
வாழ்விற்கு பொருள் தருவது நண்பர்கள் !!!

என் வாழ்விற்கு பொருள் தரும் நண்பர்களுக்கு
நண்பர்தின நல்வாழ்த்துகள்

(மூன்றாண்டிற்கு முன்பு நண்பர்கள் தினத்தில் எழுதியது)

​கிழிபடும் கவிதை

நல்ல கவிஞன்
காலம் கிழிக்கும் முன்
தன் கவிதையை
தானே கிழிக்க தெரிந்தவன் !!!

நெடிய நொடி

என்விழி கோரிய கேள்விக்கு
உன்விழி விடைத்தர எடுத்துக்கொண்ட
அரைக்கால் நொடியே, என்வாழ்வின்
நான் கடந்து(?) வந்த நெடிய நொடி !!!

இறைவி

மெய்மையை பொய்மையாய்
பொய்யையே மெய்யாய்
போலியாய் புரளியாய்
ஓயாது உரைத்தாய்

பெண்மையின் மேன்மையை
மென்மைக்குள் ஒளித்தாய்
வலிய வன்மையை
வன்மத்துள் வதைத்தாய்

கொடுமையும் கெடுதலும்
ஒடுக்கமும் பகடியும்
இன்னபல இன்னலும்
இன்னமும் இழைக்கும்
இழிநிலை மனிதா

உண்மையில் பெண்மையை
துச்சமென்று எண்ணும்
ஆண்மையின் உச்சமும்
பெண்மைக்கு துச்சமே !!!

சுழற்சி/பிறழ்ச்சி?

பிறப்பது வாழ்வதற்கு
வாழ்வதற்கு பணம்தேவை
பணமீட்ட வாழ்கையிலே
தொலைகின்றது வாழ்க்கையே !!

வேடிக்கை மனிதன்

​வெறும் பணம் ஈட்ட
உடல் நலம் தொலைப்பது
முதல் பாதியில்

அப்பணம் கொண்டு
உடல் நலம் காப்பது
பிற் பாதியில்

அர்த்தம்

காகம் கரைந்தால்,
விருந்தினர் வருவதாக அர்த்தம்.
மயில் ஆடினால்,
மழை வருவதாக அர்த்தம்.
நரி ஊளையிட்டால்,
அதிர்ஷ்டம் வருவதாக அர்த்தம்.
நாய் ஊளையிட்டால்,
கூற்றுவன் வருவதாக அர்த்தம்.
பல்லி கத்தினால்,
நன்மை வருவதாக அர்த்தம்.
வௌவால் கத்தினால்,
தீமை வருவதாக அர்த்தம்.
குயில் கூவினால்,
இசை வருவதாக அர்த்தம்.
சேவல் கூவினால்,
சூரியன் வருவதாக அர்த்தம்.

என ஏனைய உயிர்களின் ஒலிக்கு
சரியும்,தவறுமாய் -அர்த்தம்
தேடும் மனிதா உன் ஒரு
சொல்லுக்கும் இல்லை அர்த்தம்.
பிறர்க்காக நீ சிந்தும் கண்ணீர் உன்
வாழ்க்கைக்கு சேர்க்கிறது அர்த்தம்.
பிறர் கண்ணீர் நீ துடைத்தாள்
நீ இறைவன் என்றே அர்த்தம்...

அர்த்தம்

மண்ணில் மலருக்கு அர்த்தம் அதன் மணம்
மனித வாழ்விற்கு அர்த்தம் அவன் மனம்

உலக அழகிற்கு அர்த்தம் உயர் இயற்கை
மனித உழைப்பிற்கு அர்த்தம் அவன் இரு கை

பூமி சுழற்வதன் அர்த்தம் கால மாற்றம்
மனித சுழற்ச்யின் அர்த்தம் கால ஓட்டம்

காலை நேரத்தின் அர்த்தம் சூரிய உதயம்
மனித வீரத்தின் அர்த்தம் அவன் சீரிய இதயம்

பிரபஞ்சத்தின் அர்த்தம் அவை கடந்த எல்லை
மனித சிந்தையின் அர்த்தம் எல்லை கடந்த மூளை

கடவுளின் பண்பிற்கு அர்த்தம் புனிதம்
மனித படைப்பிற்கு அர்த்தம் மனிதம்....


ஞானம்

எண்ணற்ற நபருக்குத் தெரியும்
எண்ணற்ற நபர் கேட்டிருக்ககூடும்
எண்ணற்ற நபர் படித்திருக்ககூடும்
எண்ணற்ற நபர் கண்டிருக்ககூடும்
எண்ணற்ற நபர் உணர்ந்திருக்ககூடும்
அனைவரையும் ஒன்றுதிரட்டி
விசாரணை செய்தால்
விடை கிடைக்ககூடும்
"தெரியாது" என...

கவிதை

கவிஞனாய் பயணிக்கயில்
அவன் கவிதை
அவன் கவிஞனானால்
அது மரணம்

கவிதை

அந்த மரத்துல
அந்த கிளையில

பஞ்சவர்ணக் கிளின்னு
ராமு சொன்னான்

பச்சைக் கிளின்னு
ராசு நின்னான்

நொண்டிக் கொக்குன்னு
பாலு சொல்ரான்

அண்டங் காக்கான்னு
பாபு துள்ரான்

அந்த மரத்துல
அந்த கிளையில

அதே நொடியில
அந்த காட்சிய

அப்படியே நிறுத்தயில
அது பறவையில்ல
பறவையில்ல
"கவிதை"

பொங்கல் வாழ்த்துக்கள்

தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்களின் எச்சமாக மிச்சமுள்ளது பண்டிகைகளின் கொண்டாட்டங்களாகிய விழாக்களே... அந்நியசத்தி, அரசியல்சத்தி, அநியாயசத்தி, அறியாமைசத்தி, அலச்சியசத்தி  என அனைத்து  அனாவசிய சதிகளும் சத்திபெற்று நமது உணர்வுகளை மென்று தின்று தீர்த்தும் பசி வேட்கை அடங்காது மீதமுள்ளவற்றையும் தின்ன எத்தனித்துக்  கொண்டிருக்கையிலே, நம் தமிழர் விழாக்களில் தலையாய விழாவாகிய பொங்கல் திருவிழாவின் இன்றியமையாமையையும் அதன் தொடர்சியாகிய அனைத்து  நிகழ்வுகளையும் கொண்டாடி மகிழ்வதுடன், அடுத்துவரும் அத்துணை தலைமுறைக்கும் விட்டுச்செல்வோம் !

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், தைத்திருநாள் , தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!  


கவியின் தோற்றம்

ஞாயிறு முளைக்குது
ஞாயிறு முளைக்குது
என் சிந்தைக்குள்ளே
மிளிர்ந்து சொலிக்குது

திங்கள் திரியுது
திங்கள் திரியுது
என் அகத்திணை
அடக்க திமிர்ந்து திரியுது
ரத்தநாளங்கள் சுற்றி தேயுது
ஞாயிறை தணிக்க
நித்தம் நெருங்கி வளருது

பிராணன் தவிக்குது
பிராணன் தவிக்குது
ஞாயிறு திங்களில்
சுழன்று தவிக்குது

நீர் சுரக்குது
நீர் சுரக்குது
காயக்கடல் அலை
புரண்டு பிறக்குது
கண்களில் கழன்று
கட்டவிழ்ந்து கொட்டுது

வையமென் வழியே
வழிகேட்டு விழிக்குது
திக்கற்று கிடக்குது
ஏங்கி தவிக்குது

இயற்கையும்
இயற்கைசக்தியும்
திமிர்ந்து எழுந்து
கரம் வழி
புறம் விழுந்தோடுது

இனி நில்லாது
நடக்கும் எம்கவி
இதில் செழித்து
தழைக்கட்டும் இப்புவி !!!

இருத்தல்

இருத்தலை உணர்தல் இயங்குதல்
இயங்கி கொண்டேயிரு
இல்லையேல் இறந்துவிடு
இமைப்பொழுதேனும் இயக்கம் நிற்பின்
இதயம் நிற்கும் !!!