ஒரு மணித்துளி


 "ஒரு மணித்துளி" என்ற குரல் கேட்கவே சட்டென்ற வியப்பில் திரும்பினான்.


அவன் மனதில் நொடிப்பொழுதில் எண்ண அலைகள் பலவாறு பாயத்தொடங்கியது. அந்த உறுதியான இனிமையான குரல் , அந்த தூய தமிழ் உச்சரிப்பு, அந்த பொலிவான உருவம், கையில் ஏதோ நூல்., அட்டையை உற்று நோக்கவே திருவள்ளுவர், அந்த திருவள்ளுவர் உருவம் நாம் அனைவரும் என்றுமே பார்த்து பழகிய வெண்மை நிற உடையுடன் காணப்பட்டார். நல்ல வேளை அவருக்கு காவி உடை அணிவிக்கவில்லை என்ற ஒரு சிறு நிம்மதிப் பெருமூச்சு.

"வணக்கம். வெளியாள் முன்பின் அறியாதவன் என்று சிந்திக்க வேண்டாம், கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளீரே?" என்று வினவ. 

அவன் வேறு எதோ உலகத்தின் ஓரத்தில் இருந்து நிகழ்கால எல்லைக்குள் கால் பதித்தான். இப்பொழுதுதான் அவன் பூங்காவில் இருப்பதும், இங்கு உலாவும் யாவரும் மகிழ்ச்சிக்கு உறவான எதோ ஓர் உணர்வு நிலையில் இருப்பதும். தான் மட்டும் தன் மனவுலகில் அதே அழுத்தத்தினூடே அமர்ந்திருப்பதும் புரிகிறது.

"தங்களுக்கு ஒப்புதல் இல்லாவிடின் விட்டுவிடுங்கள்" என்று கண்ணியமாக விலக முற்பட.

அவன் இடைமறிக்கிறான். பொறுத்தருள்க. ஒரு மணித்துளி

"நீங்கள் இயல்பாகவே பேசுங்கள்" என்று அவர் சொல்ல.

வேறு உலகத்தில் இருந்த என்னை இவ்வுலகிற்கு அழைத்துவந்தது இத்தொடரே.  ஒரு மணித்துளி. இயல்பினில் தமிழ் பற்றுடன் உள்ள எனக்கு உங்கள் தூய தமிழ் என்னை சிந்தனையில் ஆழ்த்திற்று, ஆகையால் தூய தமிழ் என் விருப்பதேர்வே உங்களை போன்றோரிடம் வாய்ப்புள்ள பொழுது இப்படி பேசினால் தான் உண்டு, என்று ஒருவாறு மறுமொழி தந்தான். 

"மகிழ்ச்சி" என்று மேலும் கேட்பதற்கு செவி மடுத்தார்.

வேலை நம் வாழ்க்கையை முழுமையாக தின்று விடுகிறது, நம் விருப்பம், அவா, இலக்கு, என்று அத்தனையையும் மென்று மென்று, நம் உணர்வுகள் முதல் உயிர் வரை அனைதையையும் தின்று செமிப்பதே வேலையின் வேலை. நமது விடுதலையை அடகுவைத்து தான் அலுவலக நுழைவு சீட்டு வாங்க முடியும் போலும். தன்மானம் உள்ளவன் வசிக்க உலகம் உகந்த இடம் இல்லை போலும். 

"பொறுமை தோழர், இதுவும் கடந்துபோகும்" என்று தேற்ற முயற்சிக்க.

ஆம். இதுவும் கடந்து போகும், இதைவிட பெரிதாய் வந்து சேரும். இதைத் தான் நித்தம் நித்தம் கண்டு வருகிறேன். 

"ஏன் தோழர், அப்படி என்ன நித்தம் கவலை சூழ் வாழ்வு , இங்கு உள்ளவர்களின் மன நிலையை காணவில்லையா" என்று கேள்வியினை தொடுக்க 

இங்கு காணக் கிடைப்பதை வைத்து நாம் எந்த வகையான தீர்மானத்திற்கும் செல்ல இயலாது, இங்கு சிரித்து கொண்டு இருக்கும் அனைவரும்
 நிச்சயம் கொண்டாட தக்க வாழ்க்கை வாழவில்லை, என்பது என் திடமான நம்பிக்கை. அதோ அங்கு விளையாடி கொண்டு இருக்கும் என் மகள், அவளுடன் சிரித்து பேசும் என் மனைவி இவர்களே இதற்கு சான்று. இவர்கள் இருவரும் ஒரு மணிநேரம் முன்பு வரை ஓர் அலுப்பில் தான் இருந்தனர். 

"ம்ம்" இவன் வெறுமனே பிதற்றவில்லை என்று இவருக்கு தோன்றிற்று, ஆகையால் மேலும் தலையை அசைத்து அவன் பேசுவதை உள்வாங்கி கொண்டிருந்தார்.

ஏழு அகவை ஆனால் தான் பள்ளி அனுப்ப ஏதுவான பருவம் என்று உலகினில் தலை சிறந்த கல்வி பயிற்றுவிக்கும் நாடு செயல்படுகிறது, ஆனால் இங்கு அகவை 2ஐ தொட்டால் பள்ளிக்கூடம். 7ஆம் அகவையில் நாடு தழுவிய பொது தேர்வு அதை நடைமுறை படுத்த தேசிய சோதனை மையம், அந்த நிறுவனத்திற்கு தலைவராய் நாட்டின் பிரதமர். கடல் போல் விரிந்த அறிவினை பூனை குட்டி நாவால் நக்கி குடிப்பதே இங்கு கல்வி. இதனை இங்கு கேள்வி கேட்க கூடாது. கேட்டால் தேச விரோதம். எல்லோருக்கும் எப்படி கல்வியை கொண்டு சேர்ப்பது என்று சிந்தித்த நிலை மாறி, எப்படி கற்பதை தடுப்பது என்ற புதிய (பழைய இத்துப்போன) சிந்தைக்கு செயல் கொடுக்க வீரியமான முயற்சி. 
 
"ம்ம்" என்று வலுவற்ற குரல் கொடுத்து அமைதியானர்.

இவ்வுலகு நம் பிரத்தியேக உரிமை என்று சொந்தம் கொண்டாடி இயற்கை, இயற்கை வளங்கள், மற்றும் நமது வருங்கால சந்ததியினர் வசிக்க, கற்க, மேம்பட, வாழ வழி இல்லா வகையில் பீடுநடை போடுகிறோம். 3, 5, 8,12 என்று எண்ணற்ற தடைகளை தாண்டி தாண்டி வந்தாலும், உள்ளே வர இயலாமல் தடுப்பதனையும் மீறி புலி பாய்ச்சலில் வரும் அணிதாக்களையும், பிரதிபாக்களையும் பலி கேட்க தவருவதில்லை. அதனிலும் தாண்டினால் ரோஹித் வேமுளாக்களையும்,  பாத்திமா லத்தீப்க்களையும் மட்டும் விட்டு வைப்போமா. கல்வி கற்க இத்தனை போராட்டம். இதனை எதிர்த்து கேட்க் முற்பட்டால் ஸ்டோலின்களின் நிலை தான். கல்விக்கே வழிகொடா சமூகம் வாழ வழிசெய்யத்தான் வழியேதும் புலப்படவிடுமோ.

"..." உற்சாகத்துடன் தொடங்கிய மனிதர் மௌனம் காத்தார் , இது இவன் தன் பிள்ளைக்கு மட்டும் நினைத்து சீற்றம் கொள்ளவில்லை என்றும் இது அற்சீற்றமே என்றும் அதன்ஞாயதையும் உணர்ந்தார்.

கல்வி தொடங்கி நாம் அன்றாடம் கடந்து வரும் ஆயிரம் நிகழ்வுகளுக்கு மறுமொழியோ, எதிர்வினையோ நிகழ்த்த இயலா வண்ணம் தன் குடும்பம், அலுவலகம், அகம், புறம் அனைத்திற்கு இடையேயும் வாழ்க்கை கட்டுண்டு கிடப்பதை காண எவ்வகை உணர்வு மேலெழும் என்று அவன் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு மனச்சான்றாய் ஒலிக்கின்றான். மொத்த வலியுடன் இயலாமையின் வெளிப்படாய் வெடித்து நின்றான். 

"   " அவனிடம் உரையாடி கொண்டு இருந்த நபர், அங்கு இல்லை. அவர் திடீர் என்று மறையவில்லை., ஏனெனில் அப்படி ஒரு நபர் அங்கு இல்லவேயில்லை. அது அவன் மனவெளிப்பாடு. அவர் இல்லாமல் போகவே மீண்டும் மொழிகள் அற்ற சுழிய நிலைக்கு செல்கிறான்..

அவர் கையில் வைத்திருந்த நூல் காற்றில் திரும்பி,

"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை"

என்று யாரும் அற்ற பிரபஞ்ச வெளியில் காலத்தை கடந்து தொக்கி நிற்கிறது...


- 20/11/2019